லட்டு

தேவையான பொருட்கள்

கடலை மாவு - கால் கிலோ
ஜீனி - அரை கிலோ
நெய் - மூன்று தேக்கரண்டி
முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்
ஏலக்காய் - பத்து
கிஸ்மிஸ் - இருபது
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்

கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்.
தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும் உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது.
பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.
பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.

ஜாங்கிரி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சை அரிசி - ஒரு பிடி
சீனி - அரை கிலோ
ஆரஞ்சு பவுடர் - சிறிது
ரோஸ் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
ரீபைன்டு ஆயில் - அரை லிட்டர்
கனமான துணி - ஒரு சதுர அடி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்.
ஜாங்கிரி பிழிவதற்கு சற்று கனமான, ஒரு சதுர அடி அளவுள்ள துணியை எடுத்துக் கொள்ளவும். துணியை நான்காக மடித்து நடுவில் சிறிய துளை இட வேன்டும். டெய்லரிடம் ஜாங்கிரி ரெட்டு என்று சொன்னால் தைத்து தருவார்கள்.
முதலில் உளுத்தம் பருப்பையும், பச்சை அரிசியையும் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பையும், அரிசியையும் ஒன்றாய் சேர்த்து கிரைண்டரில் இட்டு, தண்ணீர் அதிகம் விடாமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கலர் பவுடரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மாவு அரைக்கும் போதே சீனியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
அரைத்த மாவினை துணியின் மையத்தில் வைத்து, அதை குவித்து பிடித்து, அழுத்தினால் ஓட்டையின் வழியாக மாவு வருமாறு செய்து கொள்ளவும்.
இப்போது வாயகன்ற அடி தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும். சூடானதும் துணியில் உள்ள மாவை ஜாங்கிரிகளாகப் பிழிந்து வேகவிடவும். சட்டியின் அகலத்தைப் பொறுத்து ஒரு முறைக்கு மூன்று நான்காகப் பிழிந்து விடலாம்.
ஜாங்கிரி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விடவும். அதிகம் வெந்தால் முறுகி விடும். பதமாக வேக வைக்கவேண்டும்.
இரண்டு புறமும் பதமாக வெந்தவுடன் ஒரு சாரணி கொண்டு, எண்ணெய் வடித்து எடுத்து சீனிப் பாகில் போடவும்.
பாகில் சற்று நேரம் ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். இப்போது சுவையான, சூடான ஜாங்கிரி தயார். ஜாங்கிரி பிழிவதற்கு சற்று அனுபவம் தேவை. முதலில் துணியில் மாவை எடுத்து ஒரு வாழை இலையில் இரண்டு செ.மீ. விட்டத்திற்கு வட்டம் போட்டு அதன் மேல் சிறிய சிறிய வட்டங்களாக (கடையில் இருப்பதை போல) பிழிய வேண்டும். பல முறை செய்தவுடன் கை பழகி விடும். பிறகு எண்ணையில் நேரடியாக பிழிய வேண்டும்.

எச்சரிக்கை: ஜாங்கிரி பிழிய ஆரம்பிக்கும் முன் கையில் வளையல், பிரேஸ்லெட்டை கழற்றி விடவும். நேரடியாக எண்ணையில் பிழியும்போது அவை சூடாகி கையில் மாறாத தழும்புகளாகி விடும்.